இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிக்கும் இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் சிறுபான்மையின மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இந்த ஆட்சியானது இராணுவமயமாக்கலை நோக்கி பயணிக்கின்றது. அமைச்சின் செயலாளர் பதவிகளுக்குகூட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச நிறுவனங்களின் பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கே வழங்கப்படுகின்றது. இவ்வாறு இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிக்கும் அரசாங்கத்துக்கு வாக்களிப்பதா அல்லது ஜனநாயகத்திக் பிரகாரம் செயற்படும் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதா என்பது தொடர்பில் நீங்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
இது மிகவும் முக்கியமான தேர்தல். எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். ” – என்றார்.
