கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, ‘தனிமைப் பெருந் தொற்றும்’ (Loneliness epidemic) அதிகரித்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றும், நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
‘பெர்ஸ்பெக்டிவ்ஸ் ஆன் சைக்காலஜிகல் சயின்ஸ்’ (Perspectives on Psychological Science) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு நபர் தினமும் பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை 338 ஆகக் குறைந்துள்ளதால், மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல்களும் (Small talk) கூடக் காணாமல் போய் வருகின்றன.
இது குறித்து ஆய்வின் இணை ஆசிரியரும், மிசோரி-கான்சாஸ் சிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான வலேரியாபைஃபர் (Valeria Pfeifer) கூறுகையில், “பேச்சு வார்த்தைகளுக்கு வெளியே நாம் உருவாக்கும் உறவுகள் வலுவானவையாக இருப்பதில்லை. இதனால் அறிவுசார், சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள சுமார் 2,200 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, மக்கள் இப்போது நாளொன்றுக்குச் சராசரியாக 12,792 வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்கள்.
குறிப்பாக, 25 வயதிற்குட்பட்டவர்களிடம் பேசும் பழக்கம் மிகவும் மோசமாகக் குறைந்துள்ளது. 25 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் ஆண்டுக்கு 314 வார்த்தைகள் குறைந்த நிலையில், 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் ஆண்டுக்குச் சராசரியாக 451 வார்த்தைகள் குறைந்துள்ளன—இது மூத்தவர்களை விட 44% அதிக வீழ்ச்சியாகும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் நேரில் பேசுவதைத் தவிர்த்து, மளிகைப் பொருட்கள் முதல் உணவக உணவுகள் வரை அனைத்தையும் வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளும் “வசதிப் பொருளாதாரமே” (Convenience economy) இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று பைஃபர் கூறினார்.
“நாம் ஒருவருக்கொருவர் பேச வேண்டிய சூழல்களைத் தொழில்நுட்பம் மாற்றியமைத்துள்ளது இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, காபி கடையில் காபி போடுபவரிடம் நேரில் பேசுவதற்குப் பதிலாக, இப்போது செயலி (App) மூலமே ஆர்டர் செய்து விடுகிறோம்,” என்று அவர் விளக்குகிறார்.
குறைவான பேச்சு வார்த்தைகள், தகவல்தொடர்பு தொடர்பான அறிவுசார் சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் மத்தியாஸ் மேஹ்லுடன் (Matthias Mehl) இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்ட ஃபைஃபர் எச்சரித்துள்ளார்.
குறுஞ்செய்திகள் (Text messages) மற்றும் தட்டச்சு செய்யப்படும் உரையாடல்கள் மூலம் தொடர்புகொள்வது, நேருக்கு நேர் பேசுவதை விட வலிமை குறைந்த சமூகப் பிணைப்பையே உருவாக்குகிறது; மேலும் உரையாடலின் நுட்பமான உணர்வுகளும் இதில் தொலைந்து போகின்றன.
“இது தனிமைப் பெருந்தொற்றுக்கும், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் வழிவகுக்கக்கூடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்காக 10 முதல் 94 வயது வரையிலான பங்கேற்பாளர்களின் அன்றாட வாழ்க்கையின் சில பகுதிகளைத் தானாகவே பதிவுசெய்யும் சாதனம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
2005 முதல் 2019 வரை அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட 22 தனித்தனி ஆய்வுகளின் தரவுகளை இணைத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
2019-க்குப் பிறகு, குறிப்பாகக் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய தொலைதூர வேலைப் பழக்கம் (Remote work) மற்றும் சமூக இடைவெளி காரணமாக மக்களின் இயல்பான உரையாடல்கள் பெருமளவில் குறைந்துள்ளதால், இந்த நிலை மேலும் மோசமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.










