ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரானிய குடியரசின் முழு மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கி வருகிறது என ஈரானின் பாசிஜ் (Basij) அமைப்பின் தலைவர் ஹொசைன் தாயெப் (Hossein Taeb) தெரிவித்துள்ளார்.
அந்த முக்கிய கடல்வழிப் பாதையைக் அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் ஈரானுக்கு இருக்கும் செல்வாக்கைக் குலைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட தாயெப், ஈரானிடம் விமானப் படையோ, கடற்படையோ இல்லை என அமெரிக்கா கூறியபோதிலும் மீண்டும் அது தோல்வியையே தழுவியுள்ளது என்றார்.
“இன்று ஹோர்முஸ் நீரிணை ஈரானின் முழு மேலாண்மையிலும் கட்டுப்பாட்டிலும்தான் உள்ளது. நாடு முழுப் பாதுகாப்போடு தனது பாதையில் தொடர்கிறது” என Fars செய்தி நிறுவனம் வாயிலாக அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் வெடித்தது.
இதன்பின்னரே உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுப் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதற்குப் பதிலடியாக, ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை அறிவித்தது.
இதனிடையே, ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனியின் (Mojtaba Khamenei) ஆலோசகர் முகமது மொக்பர் தனது எக்ஸ் (X) தளத்தில், ஈரானின் நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் “தாக்குதல் போரே” முதன்மை உத்தியாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் ராணுவ உத்தரவாதங்களைச் சாராமல், ஓமானுடன் இணைந்து ‘ஹோர்முஸ் பொருளாதார-பாதுகாப்பு பொறிமுறையைச்’ செயல்படுத்துவதே புதிய பிராந்திய ஒழுங்கிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்றாத வரை ஜலசந்தியைத் திறக்க முடியாது என்றும், அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாக இதைச் செய்ய முடியாது என்றும் மூத்த ராணுவ அதிகாரி ரசூல் சனை-ராட் தெளிவுபடுத்தியுள்ளார்.
