2026 இல் நீர் கட்டணம் உயராது! 2027 ஜனவரியில் மீளாய்வு என அமைச்சர் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குள் நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதியளித்துள்ளார்.

நீர் கட்டணங்கள் தொடர்பான அடுத்த மீளாய்வு 2027 ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அப்போது தற்போதைய கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது மாற்றமின்றி தொடர்வதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டச் செயலகத்தில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு சுமார் ரூ.2 பில்லியன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நீர்க் குழாய்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள குழாய்களை திருத்துதல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்குப் பதிலாக புதிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் வகையில் அவற்றை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல் நினோ காலநிலையின் தாக்கம் இதுவரை நீர் வழங்கல் சபை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் நிர்வகிக்கப்படும் நீர் மூலங்களை பாதிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார். எனினும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles