நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
நோய்கள் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அதிக வெப்பம் காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முதியவர்கள் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லீட்டர் நீர் அருந்த வேண்டும். சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப நீர் வழங்கப்பட வேண்டும்.
நீண்டகாலம் போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரகக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
போதிய நீர் அருந்தாமல் திறந்தவெளிகளில் வேலை செய்வது அல்லது சுற்றுலா செல்வது வெப்ப அதிர்ச்சி, மயக்கம், வலிப்பு மற்றும் உயிரிழப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, வெளியே செல்லும்போது கண்டிப்பாகக் குடிநீர் போத்தலை உடன் எடுத்துச் செல்லவேண்டும்.
தற்போதைய சூழலில் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் உள்ளதால், சிறுவர்களுக்கு எப்போதும் சுத்தமான குடிநீரையும் சுகாதாரமான உணவையும் மட்டுமே வழங்க வேண்டும்.
செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, எலுமிச்சை சாறு, தோடம்பழச் சாறு, இளநீர், கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைச் சிறுவர்களுக்கு வழங்க வேண்டும்.
சிறுவர்கள் கைபேசிகளில் நேரத்தைச் செலவிடுவதைத் தடுத்து, அவர்களை உடற்பயிற்சி சார்ந்த வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்குமாறு பெற்றோர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
