சர்வதேச பிரதிநிதிகளுடன் சஜித் அவசர சந்திப்பு

இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமை, அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் பிரதானிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மேல்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் சமர்ப்பித்துள்ள யோசனை மற்றும் தற்காலிக அரசியலமைப்புத் திருத்தங்களால் ஏற்படும் பரந்த தாக்கங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதிகாரம் பகிர்ந்து செல்லும் நியமங்கள், அவற்றுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்யாமல், வெளிப்படைத்தன்மை வாய்ந்த மற்றும் மக்கள் கருத்தறிந்து முன்னெடுக்கப்படும் கொள்கை அடிப்படையிலான செயன்முறைகள் ஊடாகவே அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், அரச நிறுவனங்களின் சுயாதீனத்தை உறுதி செய்வதற்கும் எதிர்க்கட்சி என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், முக்கிய அரசியலமைப்பு விவகாரங்களில் முறையான மேற்பார்வையும் விழிப்புணர்வூட்டும் மக்கள் கருத்தாடல்களும் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயக ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பேண சர்வதேச பங்காளிகளுடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles