நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்பு!

நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்புடன் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் புறக்கணிப்பு!

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு “நிபந்தனையற்ற சம்பள உயர்வை” அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அதேபோல, சம்பள அதிகரிப்பு தொடர்பில் உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததால், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு இந்தச் சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி. இது குறித்து மேலும் தெரிவிக்கையில்:

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு நாம் சவால் விடுத்திருந்தோம். ஆனால், நிபந்தனைகளை விதிக்குமாறு நாம் கூறவில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வைத் தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் ஊடாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்தச் சம்பள உயர்வு முழுமையாகக் கிடைக்கப் பெறும்.

அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள சம்பள உயர்வு, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாள் சம்பளத்தைப் பெறுவதற்காகப் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கொழுந்து எடைபார்க்கும்போது கழிக்கப்படும் (பிடிக்கப்படும்) கொழுந்தின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளுடனேயே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எமக்கு நிபந்தனையற்ற சம்பள உயர்வே அவசியமாகும்” என்று கூறினார்.

Related Articles

Latest Articles