ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு (Kuril Islands) ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட விஜயத்திற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மொஸ்கோவிலுள்ள ஜப்பானியத் தூதருக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை (Summon) விடுத்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இந்த தீவுச் சங்கிலியின் தெற்குப் பகுதியிலுள்ள ‘இத்துருப்’ (Iturup) தீவுக்கு அதிபர் புடின் அண்மையில் விஜயம் செய்தார்.
இத்தீவுகளை ஜப்பான் ‘வடக்கு பிரதேசங்கள்’ (Northern Territories) என உரிமை கோரி வருகிறது.
இத்தீவுத் தகராறு காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் உலகப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை.
புடினின் இந்த விஜயத்திற்குப் பதிலளித்த ஜப்பான் பிரதமர் சனே தாகைச்சி (Sanae Takaichi), “புடினின் விஜயம் வடக்கு பிரதேசங்கள் குறித்தான ஜப்பானின் நிலைப்பாட்டிற்கு எதிரானதுடன், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டித்தார்.
உக்ரைன் போரினால் ஏற்கனவே சுமுகமற்ற நிலையில் உள்ள இருநாட்டு உறவுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, “இத்துருப் உள்ளிட்ட வடக்கு பிரதேசங்கள் வரலாற்ற ரீதியாகவும் சர்வதேச சட்டங்களின்படியும் ஜப்பானின் சொந்த நிலப்பரப்பாகும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானியக் தலைவர்களின் “ரஷ்ய எதிர்ப்பு” கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் மிகைல் கலுசின் (Mikhail Galuzin), ஜப்பானியத் தூதர் அகிரா முடோவைச் (Akira Muto) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “தெற்கு குரில் தீவுகள் மீதான ரஷ்யாவின் இறையாண்மையும் அதிகார வரம்பும் மாற்ற முடியாதவை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.நா சாசனத்தின் அடிப்படையில் இப் பகுதிகள் ரஷ்யாவிற்கு உரித்தாயின. இதனை கேள்விக்குட்படுத்தும் ஜப்பானின் முயற்சிகள் சட்டவிரோதமானவை” என ரஷ்ய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், மேலை நாடுகளின் தடைகளுக்கு ஜப்பான் ஆதரவளித்து வருவதால், அதற்குப் பொருத்தமான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை ரஷ்யாவிற்கு உண்டு என்றும் தூதரிடம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், “வடக்கு பிரதேசங்கள் மற்றும் அதிபர் புடினின் விஜயம் குறித்த ஜப்பானின் நிலப்பாட்டைத் தூதர் அகிரா முடோ தெளிவாகக் எடுத்துரைத்தார்” என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
