“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
“வீடுகள் மிகவும் தரமாக உள்ளன. கபரகலயில் கட்டப்பட்ட வீடுகள் மாளிகைபோன்றது. எனவே, எதிர்க்கட்சியில் இருக்கின்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கின்றோம். எதிர்வரும் 28 ஆம் திகதி கபரகல வாருங்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு கட்டிகொடுக்கும் வீடுகளை பாருங்கள் என திறந்த அழைப்பு விடுக்கின்றேன்.” எனவும் அவர் கூறினார்.
“2023ஆம் ஆண்டு கபரகல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வீடுகளை கட்டி முடித்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அந்த வீடுகள் மக்கள் உரிமையாக்கப்படவுள்ளன.. ஒவ்வொரு வீட்டுக்கும் 28 லட்ச ரூபாயும், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 4 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வீட்டு திட்டத்தில் முறையான பாதைகள், வடிகால் அமைப்பு, காணி உரித்து, தனியான முகவரி, தபால் பெட்டி, நீர் தாங்கிகள், பாதுகாப்பு மதில் மற்றும் சூரிய சக்தி மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மலையக பாடசாலைகளுக்கு காணி உரிமை வழங்குதல், ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்தல், பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வந்து சுகாதார சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.










