இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
“இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“மரண தண்டனை தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனால், அது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் அல்ல. அவ்வாறான எந்தவொரு கொள்கைத் தீர்மானத்தையும் அமைச்சரவை எடுக்கவில்லை என்பதைப் பொறுப்புடன் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருப்பினும், மரண தண்டனையை அமுல்படுத்துமாறு கோரிப் பொதுமக்கள் எங்களுக்குக் கடிதங்களை எழுதி வருகின்றனர்; கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இது குறித்து எந்தவொரு கொள்கை ரீதியான முடிவையும் எடுக்கவில்லை” என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
