ஒக்டோபர் முதல் டிசம்பர்வரை இலங்கையில் எல் நினோ தாக்கம் உக்கிரம்!

எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளதாவது:

“அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் வருடாந்த மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே பதிவாகின்றது.

எனவே, வழக்கமான அளவை விட மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில், நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வெள்ளப்பெருக்கு கண்டிப்பாக ஏற்படும் என்று கூறிவிட முடியாது. எனினும், அப்படி ஒரு சூழல் உருவானால் அதை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

“எல் நினோ தாக்கம் 2027 ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக 2026 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே எல் நினோ தீவிரமடையும். அதன்பின்னர் படிப்படியாக வலுவிழந்து 2027 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இயல்புநிலை திரும்பும்” என்று அவர் தெரிவித்தார்.

 

 

Related Articles

Latest Articles