நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்அரசாங்கத்தின் யோசனை, வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பதற்கான ஒரு நிர்வாக நடவடிக்கை என்ற கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதோ அல்லது நம்பிக்கைக்குரியதோ அல்ல என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
வழக்குகளின் தாமதத்தைக் சாக்காக வைத்து நீதித்துறையின் கட்டமைப்பை மாற்ற முற்படுவது நீதித்துறை சீர்திருத்தம் அல்ல என்றும், அது அரசியலமைப்புச் சட்டம் மூலம் அரசியல் இலக்குகளை அடைவதற்கான முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன்,
“நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பது அவசியமானது மற்றும் அவசரமானது என்பதில் சந்தேகமில்லை. இதற்காக நீதிபதிகள், நீதிச் சேவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் நீதி அமைச்சுக்கு ஏற்கனவே பல நடைமுறைச் சாத்தியமான யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
நிர்வாகச் சீர்கேடுகள், ஊழியர் பற்றாக்குறை, போதிய வளமின்மை மற்றும் நடைமுறைத் தாமதங்களே வழக்குத் தேக்கத்திற்கு முக்கிய காரணங்களே தவிர, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்ல.
சட்டத்துறையினரின் பரிந்துரைகளைச் நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு நிர்வாகப் பிரச்சினையைச் சாட்டாக வைத்து நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயல்கிறது.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்களே இந்த யோசனையை எதிர்ப்பதாக அரசாங்கம் கூறி வந்த பிரச்சாரம் தற்போது முற்றிலும் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. 30,000 சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் முதன்மைச் சட்ட அமைப்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இந்த யோசனையை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஊழல் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றோ, சந்தேகநபர்கள் கைது செய்யப்படக் கூடாது என்றோ யாரும் கூறவில்லை. ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு உண்மையிலேயே ஊழலை எதிர்க்கும் அர்ப்பணிப்பு இருந்தால், அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மகிந்த சமரசிங்க, கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கொள்கலன் விவகாரம், நிலக்கரி கொள்முதல் விவகாரம், 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் காணாமல் போனமை தொடர்பிலான புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை (CID) பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும்.
அரசாங்கம் தனது அரசியல் நலன்களுக்கு ஏற்றவாறு நீதித்துறையைத் தன்வயப்படுத்த முயல்கிறதா என்பதே இங்குள்ள உண்மையான பிரச்சினையாகும். சுதந்திரமான நிறுவனங்களைப் படிப்படியாக பலவீனப்படுத்தி, அதிகாரத்தைக் குவிக்கும் இந்த முயற்சி ‘வடகொரிய பாணி’ ஒற்றையாட்சி முறைமையை நோக்கிய ஒரு அரசியல் நகர்வாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராகச் செயற்பட்டபோது, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்களும் போராடினோம். அன்று என்னுடன் நின்ற தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பாதை இன்று மாறியிருக்கலாம், ஆனால் ஆட்சி மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் எனது அரசியலமைப்பு நிலப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.
மேலும், இந்த யோசனையை நிறைவேற்ற இரண்டு மூன்றில் பெரும்பான்மை மட்டும் போதாது எனவும், அதற்குப் பொதுவாக்கெடுப்பு (Referendum) அவசியம் எனவும் பல அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனக்குள்ள அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விவகாரத்தை நேரடியாக மக்கள் தீர்ப்பிற்கு (பொதுவாக்கெடுப்பிற்கு) கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
