வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் நாஷ்வில்லில் (Nashville) அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் “புற்றுநோயுடன் குறுகிய காலம் போராடி இறந்தார்” என்று அவரது பிரதிநிதிகளை மேற்கோள் காட்டி  People இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தென்மாநில நாட்டார் இசையான கன்ட்ரி இசையுலகில் தனது தனித்துவமான குரல், இதயத்தைத் தொடும் வரிகள் மற்றும் ஈர்ப்புமிக்க ஆளுமையால் சுமார் ஆறு தசாப்தங்களாகத் தனி முத்திரை பதித்தவர் டாலி பார்ட்டன்.

“Coat of Many Colors,” “Jolene” மற்றும் “I Will Always Love You” போன்ற உலகப்புகழ் பெற்ற பாடல்கள் மூலம் 10 கோடிக்கும் அதிகமான இசைத் தொகுப்புகளை விற்பனை செய்து சாதனை படைத்தவர். வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட 11 கிராமி (Grammy) விருதுகளையும் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் வறுமையான குடும்பத்தில் 1946 ஜனவரி 19 அன்று பிறந்த டாலி, தனது 6-ஆவது வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கினார்.

இசை அமைப்பது, திரைப்படங்களில் நடிப்பது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, ‘டாலிவுட்’ (Dollywood) என்ற புகழ்பெற்ற பொழுதுபோக்குப் பூங்காவையும் அவர் உருவாக்கினார்.

தொழில்முறைப் பயணத்திற்கு அப்பால், கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்கு $1 மில்லியன் நன்கொடை வழங்கியது, சிறுவர்களுக்கான எழுத்தறிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியது எனப் பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டார்.

தனது உழைப்பாலும், எளிய பின்னணியை மறக்காத குணத்தாலும் அமெரிக்க அரசியல் தளங்களைக் கடந்து அனைத்துத்தரப்பு மக்களின் அன்பையும் பெற்ற ஒரு கலைத்துறைக் குறியீடாக அவர் திகழ்ந்தார்.

Related Articles

Latest Articles