இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்ற ஆசை ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு இந்தியாவில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணமாக மாறியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த ஆதித்ய சிகார்வார் என்ற இளைஞர், தனது சுவிஃப்ட் காரை பார்த்தவுடன் அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஒரு வித்தியாசமான ஐடியாவை போட்டிருக்கிறார்.
பெயிண்ட் அடிக்கவில்லை… ஸ்டிக்கர் ஒட்டவில்லை… அதற்குப் பதிலாக காரையே ‘முத்தக் காராக’ மாற்ற முடிவு செய்துள்ளார்!
அதற்காக அவரது பெண் தோழி, லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் காரின் வெளிப்பகுதி முழுவதும் சுமார் 3,400 முறை முத்தமிட்டுள்ளார்.
இந்த முத்த அலங்காரம் முடிவதற்கு சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்ததுடன், இந்திய ரூபாயில் 800 முதல் 900 ரூபாய் வரையான லிப்ஸ்டிக்கும் செலவாகியிருக்கிறது.
அத்தனை முத்தங்களுக்குப் பிறகு காரை வீட்டில் வைத்துப் பார்த்து ரசித்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால், அந்த காரை குவாலியர் நகரின் முக்கிய வீதிகளில் வேகமாக ஓட்டி, அதையும் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார்கள்.
அவ்வளவுதான்… ‘முத்தக் கார்’ இணையத்தில் செம வைரல்!
வீடியோ சுமார் 55 லட்சம் வியூஸ் பெற்றதுடன், ஆதித்யாவின் ஃபாலோவர்சும் வேகமாக அதிகரித்துள்ளனர்.
ஆனால், வீடியோவை ரசிகர்கள் மட்டும் பார்க்கவில்லை… குவாலியர் போக்குவரத்து பொலிஸாரும் பார்த்துவிட்டார்கள்!
படேல் நகர் சிட்டி சென்டர் பகுதியில் கார் அதிக வேகத்தில் சென்ற காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய பொலிஸார், பின்னர் தாதிப்பூர் பகுதியில் காரை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதோடு கதை முடியவில்லை.
போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆதித்யாவுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 5,500 இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மூன்றரை மணி நேரம் செலவிட்டு 3,400 முத்தங்களால் அலங்கரித்த காரை, பொலிஸ் நிலைய வளாகத்திலேயே ஆதித்யா தனது கைகளால் துடைத்துச் சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
வைரலாக வேண்டும் என்ற ஆசையில்தான் இதைச் செய்ததாகவும், அது போக்குவரத்து விதிமீறலாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவத்துக்குப் பின்னர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஆதித்யா முடக்கியுள்ளார். இனிமேல் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதாகவும், இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட்களில் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஆக மொத்தத்தில், ‘3,400 முத்தங்கள் கொடுத்தது காதலி… ஆனால் ரூ.5,500 அபராதம் கட்டியது காதலன்!’
சமூக வலைத்தளத்தில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் வீதியில் சாகசம் செய்தால், லைக்குகளுடன் சேர்த்து பொலிஸாரின் ‘லைக்கும்’ கிடைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது!
