“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை கிராமிய மற்றும் தொகுதி மட்டத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக, வரும் 5ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூட்டங்களை நடத்தவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“எமக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், மக்களின் மனங்களில் எமக்குள்ள இடம் அதிகம். நாம் கிராமங்களை நோக்கிச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கியதால்தான், இன்று ஜனாதிபதியும் கிராமங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை AC அறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, மக்கள் மத்தியிற்குச் செல்ல வைக்க எம்மால் முடிந்துள்ளது. எதிர்க்கட்சியாக இது எமக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
நாங்கள் மக்களைச் சந்திப்பதோடு நின்றுவிடாமல், அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
