பண்டாரவளை மாநகர சபைக்குச் சொந்தமான 8 வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் வர்த்தகர்களிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி குறித்து, பண்டாரவளை மாநகர ஆணையாளர் பி. கஜேந்திர குமார் 2025ஆம் ஆண்டு பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து, பண்டாரவளை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால், சம்பவம் நடந்த காலப்பகுதியில் பண்டாரவளை மாநகர சபையின் மேயராக ( பொதுஜன பெரமுன) பதவி வகித்த ஆர். எம். ஜனக நிஷாந்த ரத்நாயக்க (வயது 41) என்பவர் நேற்று (செப்டம்பர் 9, 2026) மாலை 6.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை, வேவத்தென்ன, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவராவார். இவர் இன்று (செப்டம்பர் 10, 2026) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(த. டிமேஷன்)
