குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் “Good Touch – Bad Touch” என்ற கருத்துடன், குழந்தையின் சம்மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஒரு குழந்தை தன்னை ஒருவர் தொடும்போது வசதியாக உணர்கிறதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்தக் குழந்தைக்கே இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான இரண்டு புகைப்படங்களை இணைத்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடுதலும் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களில் ஒன்றில் காணப்படும் சம்பவத்தை விமர்சித்த அவர், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இலங்கையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பில் நிலவும் பரந்த பிரச்சினைகளை இது எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
மற்றொரு புகைப்படம் குறித்து விளக்கிய மருத்துவர் விக்ரமநாயக்க, சுமார் 40,000 கையொப்பங்களுடன் கூடிய மனுவொன்றை Stop Child Cruelty Trust அமைப்பு நாடாளுமன்றத்தில் கையளித்த சந்தர்ப்பத்தில் அது எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஒரு சிறுவனின் தோளில் கை வைப்பதற்கு முன்னர், “உன் தோளில் நான் கை வைக்கலாமா?” என அந்தக் குழந்தையிடம் அனுமதி கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கேள்வி தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், குழந்தையின் சம்மதத்தை மதிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அதனை பார்க்க முடியும் என்றும் மருத்துவர் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
Good Touch அல்லது Bad Touch என தொடுதல்களை மட்டும் வகைப்படுத்துவதைக் கடந்து, ஒரு குழந்தைக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சொல்லும் உரிமை இருப்பதை பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு தங்களது சம்மதத்தை வழங்கவோ மறுக்கவோ உரிமை வழங்குவது, அவர்களை வலுப்படுத்துவதுடன், அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தத் தொடுதலும் ‘Bad Touch’ ஆக மாறக்கூடும்; அது குழந்தையின் உரிமை மீறலாகவும் அமையலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தேசிய குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் விமர்சித்த மருத்துவர் விக்ரமநாயக்க, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்கள் “இல்லை” என்று கூறும் உரிமையை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, வயதுக்கேற்ற பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் உட்பட பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகள் மற்றும் அவர்களது சம்மதத்தை மதிப்பது குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
