பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் காலை வேளையில் குறித்த சிறுத்தை, தேயிலை மலையிலுள்ள கால்வாய் ஒன்றில் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அதனைத் தமது கைபேசிகளில் நிழற்படமாக பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் கடந்த வாரம் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி, டிக்கோயா-கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் நிலவும் சிறுத்தையின் நடமாட்டம் காரணமாகத் தங்களின் வளர்ப்பு நாய்கள் பல காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, அச்சூழலில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்காரவத்தை தோட்டப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










