அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலா? ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அச்சுறுத்தல் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்களின் ஆதரவும் அவசியமாகும். அதற்காகவே மக்களைத் தேடி வந்துள்ளோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகிய மூன்று துறைகளிலும் பரிமாண வளர்ச்சி அவசியமாகும்.

இந்நாட்டின் அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலானவர்களாகவே இருந்துவந்துள்ளனர். அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே மக்களும் வாழ்ந்தனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நல்லுறவு அவசியமாகும். அதற்கேற்ற வகையிலேயே அரசியல் மாற்றமும் இடம்பெற வேண்டும்.

இதற்காகக் குடும்பத்தை மையப்படுத்திய அரசியலை முதலில் மாற்ற வேண்டும்.

தந்தை ஜனாதிபதி என்றால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமர் என்றால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சர் என்றால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு உள்ளது.

பழைய யுகத்திற்குரிய இந்த அணுகுமுறை நவீன அரசியல் அல்ல. இந்த அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். இன்று அந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை நாம் இரத்து செய்துள்ளோம். அமைச்சர்களுக்குரிய வாகனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மட்டுமே இன்று பொலிஸாரும் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவும் ஒரு முக்கியமான மாற்றமே ஆகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles