ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று 14ஆம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.
ஹட்டன் நகர சபைக்கு சொந்தமான கடை அறைகளுக்கான வாடகை நீண்ட காலமாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை அறவிடும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஹட்டன்–டிக்கோயா நகர சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் இருந்து நிலுவையில் உள்ள வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், இறுதி எச்சரிக்கையாக சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உரிய காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவிக்கையில்,
நகர சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து இதுவரை சுமார் 14 கோடி ரூபாய் வரையிலான வாடகை நிலுவைத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது
நீண்ட காலமாக பெருந்தொகையான வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நிலுவைத் தொகை செலுத்தப்படாத நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதேவேளை, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட பின்னர் சில கடை உரிமையாளர்கள் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை செலுத்தியுள்ளதாகவும் அவ்வாறு ஒரு கடை உரிமையாளர் இதுவரை 3 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும், செலுத்தப்பட்ட தொகையின் அடிப்படையில் கடையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நகர சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதையும் ஹட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தது.
நகர சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கான வாடகை நிலுவை நீண்ட காலமாக அதிகரித்து வருவதால், நகர சபையின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிலுவைத் தொகைகளை முறையாக அறவிடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலைவாஞ்ஞன்










