சனிக்கிழமையன்று தாங்கள் மேற்கொண்ட பல ஏவுகணைச் சோதனைகள், நீண்டதூரம் சென்று தாக்கும் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைப் பிரிவுகள் பங்கேற்ற நேரடித் தாக்குதல் பயிற்சியின் ஓர் அங்கம் என வடகொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இதனை அந்நாட்டு அரச ஊடகமான KCNA உறுதிப்படுத்தியுள்ளது.
ஐந்து ராணுவப் பிரிவுகள் பங்கேற்ற இந்த கூட்டுத் தாக்குதல் பயிற்சியின்போது, தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள், தந்திரோபாய க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பெரிய அளவிலான பல்குழல் ஏவுகணைச் செலுத்தியான ‘ராக்கெட் லாஞ்சர்கள்’ உள்ளிட்ட பல்வேறு ஆயுத அமைப்புகள் சோதிக்கப்பட்டதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரவு பிறப்பிக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் “எதிரிகளை முற்றிலும் நிர்மூலமாக்கும்” படைகளின் திறனை மேம்படுத்தவும், வீரர்களின் மனஉறுதியை உயர்த்தவும் இந்தப் பயிற்சி உதவும் என்று பீரங்கிப் படை இயக்குநர் கூறியதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா தனது கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கிச் சுமார் 250 கி.மீ (155 மைல்) தூரம் பாயக்கூடிய பல குறுகிய தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சனிக்கிழமையன்று செலுத்தியதாகத் தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் பிரிவு தெரிவித்தது.
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய ஐந்து நாள் Freedom Edge கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவடைந்த மறுநாளே இந்த ஏவுகணைச் சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
இந்த ஆண்டில் வடகொரியா நடத்தியதாக அறியப்படும் 13-வது பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை இதுவாகும்.
தென்கொரியா சுட்டிக்காட்டிய வடகொரியாவின் சமீபத்திய பல ஏவுகணைச் சோதனைகள் குறித்து மௌனம் காத்து வந்த வடகொரிய அரச ஊடகம், தற்போது சோதனை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
“இது ஏதேனும் ஒரு தனிப்பட்ட ஆயுத அமைப்பின் சோதனை அல்ல; மாறாக, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் வலையமைப்பின் செயல்விளக்கமாகும்” என்று சியோலில் உள்ள கியுங்னம் பல்கலைக்கழகத்தின் தூரக் கிழக்கு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் பேராசிரியர் லிம் எல்-சுல் (Lim Eul-chul) தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் பீரங்கிகளை ஒருசேர ஒருங்கிணைத்துச் செயல்படும் தனது திறனை வடகொரியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக லிம் கூறினார்.
