“வயது ஒரு விஷயம் கிடையாது. 15 வயதானால் என்ன, 30 வயதானால் என்ன, சூரியவன்ஷி தன் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தான் ஒருக்காலும் சூப்பர் ஸ்டாராக ஆக முடியவில்லை என்ற தன் திறமையின் குறைபாட்டை மறைத்துக் கொண்டு பொறாமை பீடிக்க தோனியையும் கோஹ்லியையும் அடிக்கடி வம்புக்கிழுத்துதான் ஏதோ ‘சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்க வந்த மீட்பர்’ போல் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கம்பீர் இப்போது சூரியவன்ஷி போன்ற இளம் வீரர் குறித்து வைத்திருக்கும் கருத்து இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு கம்பீரால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியையே பல விதங்களில் கிளப்புகிறது.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற துலிப் கோப்பை இறுதிப் போட்டியில் சூரியவன்ஷி ஆட்டத்தைப் பார்க்கவே பெரு கும்பல் திரண்டது. அவர் ஆட்டமிழந்தவுடன் அந்தக் கும்பல் அப்படியே வெளியேறி ஸ்டேடியமே காலியாகி விட்டது. இத்தகைய ஆகிருதியான ஒரு வீரர் குறித்து எந்தவித ஆகிருதியுமே இல்லாத கம்பீர் கூறுவது இதுதான்:
“வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். அவரது திறமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர், புதிதாக அணிக்குள் வந்துள்ள 15 வயது வீரரைவிட முன்னுரிமையில் இருப்பது இயல்பானது.
சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்கு தொடர்ந்து சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்படும். இந்திய கிரிக்கெட்டில் போட்டி நிலவுவதும், திறமையான வீரர்கள் அணியில் இருப்பதும் அவசியம். 15 வயது வீரராக இருந்தாலும், 30 வயது வீரராக இருந்தாலும், தங்களுக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் சில நேரங்களில் ஏற்படும்” என்றார் கம்பீர்.










