அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அதிகாரிகளிடம் அலிசப்ரி கோரிக்கை

 

சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக சவூதி அரேபியாவில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இலங்கைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்குமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் செய்தி குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட சப்ரி, மரண தண்டனை விவகாரத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காக இன்னமும் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்பை மதிப்பது என்பதற்காக, இத்தகைய விகிதாசாரமற்ற தண்டனைக்கு முன் அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே அதிகப்படியானது” என்று சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பதிவை இட்ட சில நிமிடங்களிலேயே அனோஜன் அதை நீக்கிவிட்டு, பகிரங்கமாக வீடியோ மூலம் மன்னிப்பு கோரியுள்ளார் என்ற தகவல்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சப்ரி கூறியுள்ளார்.

“ஒரு தவறான கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, கற்றுக்கொண்டு, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பறித்துவிடக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சவூதி அதிகாரிகள் கருணை காட்டி அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

“நீதியில் கருணைக்கு இடம் இருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பிற்குத் தகுதியானவர்.”

இருப்பினும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்பு வரும் வரை, இந்த மரண தண்டனை தொடர்பான தகவல்கள் இலங்கை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles