” நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் விரைவில் ஒன்றிணையும். இதற்கான சாதகமான சமிக்ஞைகளை இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (ஐதேக) ஐக்கிய மக்கள் சக்திக்கும் (ஐமச) இடையிலான மீள் இணைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரு அணிகளும் முன்னர் ஒன்றாகச் செயற்பட்ட தரப்புகளாகும். எனவே, மீண்டும் ஒன்றிணைவது கடினமான ஒன்றாக இருக்காது. இரு கட்சிகளின் தலைவர்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று, இந்த இணைவுக்கான பச்சைக்கொடியைக் காட்டியுள்ளனர். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த இணைப்பு நிச்சயமாக நடைபெறும்.
அதேவேளை, அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டால், அதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்கும்” எனக் குறிப்பிட்டார்.










