மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டித் தொடரில் பங்குபற்றிய 39 அணிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அட்லஸ் சிசி அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
மலையகத்தின் பின் தங்கிய பாடசாலைகள் மற்றும் குறை வருமானம் கொண்ட மாணவர்களை இலக்காக கொண்டு அவர்களுடைய கல்வி தேவைக்காக நிதி திரட்டும் வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்த 20 வருடங்களாக ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
அந்த வகையில் மலையக்கல்வி அபிவிருத்தி மன்றம் இம்முறை ஏற்பாடு செய்திருந்த
கிரிக்கெட் போட்டி தொடரில் 39 அணிகள் களம் கண்டிருந்தன.
இதன் இறுதிப் போட்டிக்காக அட்லஸ் சி சி மற்றும் யுவர்போய்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகி இருந்தன.
இறுதிப் போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய அட்லஸ் சிசி அணி 5 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
67 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுவர்போய்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.
13 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அட்லஸ் சிசி அணி மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக அட்லஸ் சிசி அணியின் ரமேஷ் தெரிவானதுடன் யுவர்போய்ஸ் அணியின் வீரர் சங்கர் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவாகியிருந்தார்.
தொடரின் நாயகனாக யுவர்போய்ஸ் அணியின் வீரர் ஜெயக்குமார் தனதாக்கி கொண்டார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்சா பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










