டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற ‘உலக தடகள வீதி ஓட்ட சாம்பியன்ஷிப்’ (World Athletics Road Running Championships) தொடரின் மகளிர் அரை மாரத்தான் போட்டியில், கென்யாவின் அக்னஸ் ங்கேடிச் (Agnes Ngetich) 1 மணி நேரம் 5 நிமிடங்கள் 15 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு மகளிர் மட்டும் பங்கேற்ற 10 கி.மீ ஓட்டப்பந்தயத்திலும் உலக சாதனை படைத்திருந்த ங்கேடிச், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்தார்.
போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், இரண்டாவதாக வந்த சக கென்ய வீரங்கனை வெரோனிகா லோலியோவை (Veronica Loleo) விட 50 வினாடிகள் முன்பாகவே இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர், 2020-ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற உலக அரை மொரத்தான் போட்டியில் கென்யாவின் பேரெஸ் ஜெப்சிர்சிர் (Peres Jepchirchir) 1 மணி நேரம் 5 நிமிடங்கள் 16 வினாடிகளில் பந்தயத்தை முடித்ததே மகளிர் மட்டும் பங்கேற்ற அரை மொரத்தானின் உலக சாதனையாக இருந்தது. அதனை ங்கேடிச் தற்போது 1 வினாடி குறைத்து முறியடித்துள்ளார்.
ஆண்களுடன் இணைந்து பெண்கள் பங்கேற்கும் (Mixed-gender) ஒட்டுமொத்த மகளிர் அரை மொரத்தான் உலக சாதனையானது எத்தியோப்பியாவின் லெட்டெசென்பெட் கிடியேவின் (Letesenbet Gidey) வசம் உள்ளது. இவர் 2021-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வலென்சியாவில் நடைபெற்ற போட்டியில் 1:02:52 மணி நேரத்தில் இலக்கை எட்டியிருந்தார்.
25 வயதான ங்கேடிச்சிற்கு இந்த வெற்றி, நடப்பாண்டில் கிடைத்த மற்றொரு முக்கிய மகுடமாகும். இவர் முன்னதாக கோபன்ஹேகனில் நடைபெற்ற அணி பிரிவிலான அரை மொரத்தானிலும், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற உலக குறுக்கோட்டச் சாம்பியன்ஷிப் (World Cross Country Championships) போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










