சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவொன்றைச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரும் ஜனாதிபதியின் கடித்தை, சவூதி அரசருக்கு கையளிப்பதற்காகவே இக்குழு செல்லவுள்ளது எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரைத் தாம் நேரில் சந்திக்கவுள்ளதாகவும், இதன் போது பொதுமன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் அல்லது ஏதேனும் நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான தலையீடுகளை மேற்கொள்வதற்கும், அங்குள்ள சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தங்களது சொந்தச் செலவில் சவூதி அரேபியா செல்ல ஒப்புக்கொண்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளார்.










