“ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. எனவே, நாட்டை நாசமாக்கியவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கக்கூடாது” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
“நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் எடுத்த துணிச்சல்மிக்க முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரானது. அத்துடன் அனைவருக்கும் சட்டத்தைச் சமமாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் காரணமாகச் சுக்குநூறாகியுள்ள எதிரணிகள் ஒன்று திரண்டு, அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பயணத்தைத் தடுக்க முற்படுகின்றன. நாட்டை நாசமாக்கியவர்களுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்குவார்கள் என நான் நம்பவில்லை; அவ்வாறு வழங்கவும் கூடாது. இத்தகைய காலாவதியான அரசியல்வாதிகளால் மீண்டும் மீண்டெழ முடியாது” என்று பொன்சேகா தெரிவித்தார்.










