நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் கடும் மழை: பாடசாலைகளுக்கு விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று 24ஆம் திகதி அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் நீரேந்தும் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் இருந்து நீர் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்றைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று காலை 11 மணியுடன் நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சுமார் 11 மணியளவில் பாடசாலைகளிலிருந்து பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மண் மேடுகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் மண்திட்டுகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக காசல்ரீ, கெனியோன், லக்ஷபான, நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு கீழ்ப்பகுதியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்மட்ட உயர்வு மற்றும் திடீர் நீர் வெளியேற்றம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலைவாஞ்ஞன்

 

Related Articles

Latest Articles