பொகவந்தலாவையில் தீ பரவல்: தீக்கிரையான வர்த்தக நிலையம்!

பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

பொகவந்தலாவ நகரின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள, பலசரக்குக் கடை, மீன் விற்பனை நிலையம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றைக் கொண்ட வர்த்தக நிலையத்திலேயே இத்தீ விபத்து சம்பவித்துள்ளது.

மீன் விற்பனைப் பகுதியில் இருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு (மின் ஒழுக்கு) காரணமாகவே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர், வர்த்தக நிலையப் பகுதியில் இருந்து கடும் புகை வெளியேறுவதைக் கண்டுள்ளார். உடனடியாகச் செயல்பட்ட அவர், கடையின் உரிமையாளரைத் தட்டி எழுப்பி, வீட்டிலிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தீ பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்துப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles