” பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது. நுவரெலியா லவர்ஸ்லீப் சம்பவம் கண்டிக்கத்தக்கது. ” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
” கடந்த காலங்களில் மலையக கட்சிகளிடம் ஆட்சியதிகாரம் இருந்த காலத்தில் பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடித்தனங்கள் குறைவாகவே காணப்பட்டன.
அவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்ற பொழுதும் அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் இந்த அரசாங்கத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கு எதிராக பெருந்தோட்ட கம்பெனிகளின், தோட்ட முகாமைத்துவங்களின், முதலாளிமார்களின் அடக்குமுறை அடாவடித்தனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனை மலையக மக்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 200 வருட காலமாக வாழ்ந்த மக்களுக்கு இன்னும் காணி உரிமை உறுதி செய்யாமல் இத்தகைய சம்பவங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
மலையக மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாக காட்டிக் கொள்ளும் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.” எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
