ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு துருக்கி, பாகிஸ்தான், எகிப்து மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் “எந்தவொரு சாக்கிலும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒரு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய நாள் ஹவுதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
‘R4’ என்று அழைக்கப்படும் இந்த பிராந்திய நட்பு நாடுகள், சவூதி அரேபியாவிற்கான தங்களின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து “சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும்” முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
“பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஹவுதி அமைப்பே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இத்தாக்குதல்கள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும்” என அந்த நான்கு நாடுகளும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் துருக்கி மற்றும் அணு ஆயுத வல்லரசு நாடான பாகிஸ்தான் ஆகிய இரண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் சவூதி அரேபியாவுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Joint Defence Pact) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, இதில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.
ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டுப் பாதுகாப்புப் பொறுப்புகளை நடைமுறைப்படுத்தவும், சவூதி அரேபியாவில் படைகள் மற்றும் இராணுவத் திறன்களை “விரைவாகப் பயன்படுத்தவும்” சம்மதம் தெரிவித்துள்ளதாக கடந்த வாரம் இந்நாடுகள் அறிவித்திருந்தன.
இருப்பினும், துருக்கி சவூதிக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அதேவேளை துருக்கியப் படைகளை அனுப்புவதையோ அல்லது தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்பதையோ நிராகரிப்பதாகவும் துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் தெரிவித்துள்ளார். அங்காரா பிரதானமாக தற்காப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளையே ரியாத்திற்கு அனுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் நாடாளுமன்றத்தில் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் பெறாததால், இதுவரை துருக்கியின் ஆதரவு இருதரப்பு அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ படைகளில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவத்தையும், வலுவான பாதுகாப்புத் துறையையும் கொண்டுள்ள துருக்கி, சவூதி அரேபியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளதுடன், செங்கடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சவூதி தலைமையிலான கூட்டணியில் இணையவும் ஒப்புக்கொண்டுள்ளது.










