யேமன் ஜனாதிபதி மாளிகைமீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி

யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள்
ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதிகள் ஐந்து ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மொஅம்மர் அல்-எரியானி தெரிவித்தார். எனினும், அங்கு தங்கியிருந்த யேமன் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

ஏடனில் உள்ள சவூதி இராணுவ நடவடிக்கைகளின் தலைமையகத்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ தெரிவித்தார்.

“சவூதி இராணுவக் குவிப்புகள் எங்கிருந்தாலும் அவற்றைக் குறிவைப்பது” தங்களின் கொள்கையின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகச் சம்பவத்தைப் பார்த்த மூன்று சாட்சிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles