இலங்கையின் புராதன முருகன் ஆலயங்களில் ஒன்றாகவும், எழில்கொஞ்சும் மலையகத்தின் புசல்லாவை நகரில் அருள்பாலிக்கும் – திருத்தலமாகவும் விளங்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் நவராத்திரி விழா இன்று (20) பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நித்திய பூஜை, வசந்த மண்டபப் பூஜை மற்றும் சுவாமி உள்வீதி உலா ஆகியன இடம்பெறவுள்ளன. தொடர்ந்து மானம்பூ விழா, பிராயச்சித்த அபிஷேகம், திருவருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இரவு 7 மணி முதல் விசேட நவராத்திரி கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினரும் இந்து இளைஞர் மன்றத்தினரும் தெரிவித்துள்ளனர்.
முருகப்பெருமானின் அருளைப் பெற்றிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.
கடந்த 11ஆம் திகதி முதல் ஆலயத்தில் தினமும் மாலை 6 மணிக்கு நவராத்திரிப் பூஜைகள் பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வந்தன.
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை ஏடு தொடங்கல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்வு இடம்பெற்றது. கல்வி மற்றும் கலைகளின் தொடக்கமாகக் கருதப்படும் இந்நிகழ்வில் சிறார்கள் தமது கல்விப் பயணத்தை இறைவணக்கத்துடன் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











