சிங்கள, பௌத்தத்தை பாதுகாக்ககூடிய ஜனாதிபதியை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த நேரிடும்: தேரர் எச்சரிக்கை

“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதியை மாற்றுவதற்கான அடுத்தகட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனப் பலாங்கொட கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலேயே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை வழங்க முடியும். அரசமைப்பின் பிரகாரம் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இந்த நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுக்காவிட்டால், பௌத்த சக்திகளை அணிதிரட்டி இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாவிட்டால், பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கக்கூடிய, சிங்களத்தையும் பௌத்தத்தையும் மதிக்கக்கூடிய ஜனாதிபதி ஒருவரை, சிங்கள பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். மன்னிப்பு வழங்கப்படும் வரை நாம் போராடுவோம்.

ஞானசார தேரரின் விடுதலையே எமக்கு முக்கியம். அது நடைபெறாத பட்சத்திலேயே மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து, ஜனாதிபதியை மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்” எனப் பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.

………….

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

பிக்குகளின் தொடர் போராட்டம் உள்ளிட்ட விடயங்களால் தென்னிலங்கையில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (20) கூடுகின்றது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்குப் பொதுமன்னிப்பு கோரி பிக்குகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மற்றும் யானையின் மரணம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இன்று எதிரணியினர் கேள்விகளை எழுப்பவுள்ளனர்.

இவற்றுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பதில்கள் வழங்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

அதேபோல, நாட்டின் நிலைவரம் தொடர்பில் எதிரணிகளால் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞானசார தேரர் விவகாரத்தை மையப்படுத்தி பிக்குகள் குழுவொன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறானதொரு பரபரப்பான சூழ்நிலையிலேயே நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதிவரை நாடாளுமன்ற அமர்வு நடைபெறும்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படலாம்.

…………..

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்கப்படவில்லையா? 

தாய்லாந்து துணைப் பிரதமர் சுபஜீ சுதும்புன் (Suphajee Suthumpun) அண்மையில் மேற்கொண்ட இலங்கை பயணம் முற்றிலும் தனிப்பட்டது என்றும், அவர் கோரிய அனைத்து மரியாதைகளும் இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மிஹிந்தலைக்கு அவர் சென்றிருந்தபோது, ​​இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய இராஜதந்திர அங்கீகாரத்தையோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளையோ வழங்கத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து துணைப் பிரதமர் பௌத்த பக்தர்களுடன் இணைந்து மிஹிந்தலையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே இலங்கை வந்திருந்தார்.

இந்த பயணம் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டதால், அவருடன் வேறு எந்த அரசாங்க அதிகாரிகளும் வரவில்லை.

தாய்லாந்து தூதரகம் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறையைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில மரியாதைகளை கோரியிருந்தது, அவை இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

தாய்லாந்து துணைப் பிரதமர் இதற்கு முன்பும் இவ்வாறான சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகத் தனிப்பட்ட முறையில் இலங்கை வந்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய இராஜதந்திர மரியாதைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையிலேயே, இந்த தெளிவுபடுத்தல் வெளியாகியுள்ளது.

………….

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஒரு மணித்தியால மின்வெட்டு

நாடளாவிய ரீதியிலான மின் முகாமைத்துவ நடவடிக்கைகள் இன்றும் (20) நாளையும்(21) தொடர்கின்றன.

இதற்கமைய முன்னெடுக்கப்படும் மின்வெட்டு நடவடிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) அனுமதி வழங்கியது.

நாட்டை 4 வலயங்களாகப் பிரித்து ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (19) ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்றும், நாளையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.

………..

5ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் போராட்டம்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்கள் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் அங்கு கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவானது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தங்கியிருந்த இந்த பிக்குமார், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாக சென்றதுடன் அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

எனினும், அந்தக் கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த அவர், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

…………

இன்று மாலை பல பகுதிகளில் அடை மழை

இலங்கைக்கு அண்மித்த கீழ் வளி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles