“தயவு செய்து நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். சமூக அழுத்தமும் உள்ளது. எனவே, உரிய தீர்வை வழங்காவிட்டால் மக்கள் வீதிக்கு இறக்குவதை தடுக்க முடியாமல்போகும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராபக்ச எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு எச்சரித்துள்ளார்.
………….
பருத்தித்துறை மயானத்தில் மோட்டார் குண்டு மீட்பு
பருத்தித்துறை – சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு அருகிலுள்ள இடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டு ஒன்று, நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு இன்று காலை பருத்தித்துறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த இடுகாட்டில் மோட்டார் குண்டு ஒன்று கிடப்பதாக நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த பருத்தித்துறைப் பொலிஸார், அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பை ஏற்பாடு செய்தனர்.
அண்மையில் இந்த இடுகாடு ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது என்றும், அப்போது மண்ணுக்குள் புதைந்திருந்த குண்டு மேலே கிளறப்பட்டு, தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக வெளிப்பட்டிருக்கலாம் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இது கடந்த காலப் போர்ச் சூழலின்போது மறைத்து வைக்கப்பட்ட மோட்டார் குண்டாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

…………..
ஜனாதிபதியின் ராஜதந்திர தலையீடே அனோஜனை பாதுகாத்தது
” அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும்,அரசாங்கமும் முறையாக தலையிடாமல் இருந்திருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.
ரிஷானா நபி விவகாரத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் தான் அப்போது சவூதியுடன் தொடர்புக் கொண்டது. ஆனால் அனோஜன் விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு பெற முடியும் என்று ஜனாதிபதி அறிவித்து, அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
அனோஜனின் வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி சவூதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேல் நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
……………
ஆசிய பாரா விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை மொஹமட் சப்ரான் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான T47 நீளம் பாய்தல் போட்டியில் தனது இறுதி முயற்சியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்த அவர், வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கினார்.

…………..
இரத்தினபுரி புதிய நகரில் 200 வீடுகள்!
2025 ஒக்டோபர் 14ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, கொலின் கிரசன்ட் பகுதியில் தற்போது அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லங்களுக்குப் பதிலாக, இரத்தினபுரி புதிய நகரில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் இந்தக் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தற்போது அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைத்து, எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக அவற்றை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த 200 வீடுகளைக் கொண்ட குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 5,886.97 மில்லியன் ரூபா ஆகும்.
ஐந்து வருட காலப்பகுதிக்குள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

……….
மின்னல் தாக்கி இருவர் பலி: அநுராதபுரத்தில் சோகம்
அனுராதபுரம், நம்படகஸ்வேவ பகுதியில் உள்ள நெல் வயலில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 58 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
………..
பதுளை, கேகாலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை புதன்கிழமை (ஒக்டோபர் 21) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்யும் மழை காரணமாக மண்சரிவு, மலைச்சரிவுகள் சரிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.
நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் சாய்வடைதல், நிலத்திலிருந்து சேற்று நீர் வெளியேறுதல் போன்ற மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

…………
செம்மணி மனிதப் புதைகுழி தொற்றுநோய் அல்லது
இயற்கைப் பேரழிவால் உருவானதாக இருக்கலாம்!
– நீதிமன்றில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை தாக்கல்
சர்ச்சைக்குரிய செம்மணி மனிதப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம் என்றும், அங்கு முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் தென்படுகின்றன என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான தடயவியல் அறிக்கையைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-
“செம்மணிப் புதைகுழியானது உலகின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காண்பிக்கின்றது. முறையான வழமையில் அடக்கம் செய்யப்படும் சூழமைவுகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் புதைகுழி குறிப்பிட்டுக் கூறக்கூடிய அதிக ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றது.
இங்கு அதிகளவிலான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டபோதிலும், சடலங்கள் எந்தச் சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை துல்லியமாக நிரூபிப்பதற்குத் தேவையான வலுவான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை.
அதிகளவான என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டமைக்குக் காரணம், இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன இருந்திருக்கக்கூடும். இதனால் சடலங்களைச் சாதாரண வழியில் அப்புறப்படுத்துவதைக் காட்டிலும் அதிவிரைவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை அக்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.
இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இதுவரை மீட்கப்பட்ட சில தடயங்கள் அங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதையே வெளிப்படுத்துகின்றன.
செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் நேரடியாக இணைந்த நிலையில் ஆடைகளுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், துணிகள் சிதைவடைந்திருக்கலாமே தவிர, அவர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டனர் என்று பொருள்கொள்ள முடியாது.
துணிகள் போன்ற கரிமப் பொருட்கள் மண்ணின் இரசாயனத் தன்மை, ஈரப்பதம், நுண்ணுயிர்களின் தொழிற்பாடு மற்றும் கால அளவு காரணமாகச் சிதைவடையக்கூடியவை. மேலும், சில எலும்புக்கூடுகளுக்கு அருகில் பொத்தான்கள், பொத்தான் வளையங்கள் மற்றும் சிறிய உலோகப் பொருத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அடக்கம் செய்யப்பட்டபோது அவர்கள் ஆடை அணிந்திருந்தனர் என்பதற்கான ஆதாரங்களாகும்.
எனவே, துணி எச்சங்கள் கிடைக்காத நிலையை ஆடைகள் இல்லாதிருந்ததற்கான உறுதியான சான்றாகக் கருதாமல், காலப்போக்கில் ஏற்பட்ட சிதைவாகவே கொள்ள வேண்டும்.” – என்று அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.











