இலங்கை அணியின் வரலாற்று வெற்றி: கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 429 ரன்கள் என்ற கடின இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்து இலங்கை அணி படைத்துள்ள வரலாற்றுச் சாதனைக்கு, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், இலங்கை அணி இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தின் 429 ரன்களை எதிர்த்துப் போட்டியிட்ட இலங்கை அணி, போட்டியின் கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகச்சிறந்த வெற்றிகரமான இலக்கு சேஸிங் (Run Chase) ஆகும்.

போட்டிக்கு பிந்தைய தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இரு முன்னாள் கேப்டன்களும், இலங்கை அணியின் அதிரடி பேட்டிங், மேம்பட்ட திட்டமிடல் மற்றும் பவன் ரத்நாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக, ஜனித் லியனகே ஆகியோரின் வெற்றிக்கான பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினர்.

இவ்வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த நாசர் ஹுசைன், “இலங்கை திறமையும் ஆர்வமும் கொண்ட ஒரு கிரிக்கெட் தேசம். அவர்களுக்கு இதுபோன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் தேவைப்பட்டது; அது இன்று கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இந்த வரலாற்று வெற்றியால் அணியின் குறைகளை மறைத்துவிடக் கூடாது என குமார் சங்கக்காரா எச்சரித்தார்.

“இன்றைய வெற்றியைக் கொண்டாடுங்கள்; அதேநேரம் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் முதல் 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் கடைப்பிடிக்க வேண்டிய அமைதி குறித்து ஆலோசிக்கத் தொடங்குங்கள்” என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் உலகக்கோப்பைக்கு முன்னதாக, அணியின் நிலைத்தன்மையையும் திட்டமிடலையும் மேம்படுத்துவதில் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இப்போட்டியில் தசுன் ஷானகவை முன்வரிசையில் இறக்கிய நிர்வாகத்தின் முடிவைப் பாராட்டிய சங்கக்காரா, நவீன வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இது போன்ற தந்திரோபாய மாற்றங்கள் அவசியமானவை என்றார். ஷானக 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

மேலும், 130 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற இளம் வீரர் பவன் ரத்நாயக்கவிற்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என நாசர் ஹுசைன் வலியுறுத்தினார். “நீங்கள் இனி இவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் அவரை ஆதரிக்க வேண்டும்” என்று ஹுசைன் கூறினார்.

ஜனித் லியனகேவின் சிறப்பான ஆட்டம்

போட்டியின் இறுதிப் பகுதியில் இக்கட்டான சூழலில் பதற்றமின்றி விளையாடி, வெற்றிக்கான சிக்ஸரை அடித்த ஜனித் லியனகேவின் ஆட்டத்தை நாசர் ஹுசைன் வெகுவாகப் பாராட்டினார். சங்கக்காராவும் லியனகேவின் மனஉறுதியைப் பாராட்டியதுடன், வீரர்கள் வெற்றியையோ தோல்வியையோ நினைக்காமல் அந்த தருணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles