டயகம கிழக்கு வீதியை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரி, அப்பகுதி மக்கள் இன்று (26) கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு, அத்துடன் இம்மாதம் 20ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் டயகம கிழக்குக்குச் செல்லும் வீதியின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வீதியின் சுமார் நான்கில் மூன்று பங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த வீதியில் தற்போது முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும், வீதியின் மோசமான நிலையால் அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இந்த வீதியைப் பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக, நிறைமாதக் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் தீவிர நோயாளிகளை இந்த வீதியூடாகக் கொண்டு செல்லும்போது ஏற்படும் கடுமையான சிரமங்கள் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
சாரதிகள், தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எமது வீதியைப் புனரமைத்துத் தராமல் எந்தவொரு அரசியல்வாதியும் வாக்குக் கேட்டு வர வேண்டாம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். சேதமடைந்த வீதியை விரைவாகப் புனரமைத்து, மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.










