நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24ஆம் திகதி முதல் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் பெய்துவரும் கனமழையால் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர்மட்டங்களும் அதிகரித்துள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அன்றாடத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாளாந்தச் சம்பளத்தை நம்பி தொழிலுக்குச் செல்பவர்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக தொழிலுக்குச் செல்வதிலும், அன்றாட வருமானத்தைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்டத்தின் சில இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையால் மண் ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், மழை நிலைமை மேலும் நீடித்தால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகின்றது.
மஸ்கெலியா நிருபர்.










