டித்வாவால் சேதமடைந்த ரொசல்ல வீதி காபட் வீதியாக புனரமைக்கும் பணி ஆரம்பம்
டிட்வா சூறாவளியினால் கடுமையாகச் சேதமடைந்த ரொசல்ல ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரொசல்ல வீதி 38 கோடியே 72 லட்சம் ரூபா செலவில் காபட் வீதியாக புனரமைத்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் இன்று 27 ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீர தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ரொசல்ல ரயில் நிலைய அணுகல் வீதியின் 3.3 கிலோமீற்றர் நீளமான பகுதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 38 கோடியே 72 இலட்சத்து 20 ஆயிரத்து 698 ரூபாய் 76 சதம் மதிப்பீட்டுச் செலவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
12 மாத கால ஒப்பந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இவ்வபிவிருத்திப் பணிகளை 2027ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பிரதேச மக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் இலகுவானதும் வினைத்திறனானதுமான போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










