இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த பெருந்தோட்டத் துறை, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியப்போக்கினாலும் உரிய பராமரிப்பின்மையினாலும் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக இலங்கை தேசிய விவசாய தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டங்கள் பராமரிப்பின்றிக் காடுகளாக மாறி வருவதுடன், காகொல்ல உள்ளிட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பதுளையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலைச் செடிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், பல தோட்டங்கள் காடுகளாக மாறி வருகின்றன. தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் தோட்ட நிர்வாகங்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் பெருந்தோட்டத் துறையின் வீழ்ச்சியைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக, காகொல்ல உள்ளிட்ட பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தோட்ட நிர்வாகங்கள் பல தொழிலாளர்களை நிரந்தர ஊழியர்களாகப் பதிவு செய்யாமல், தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தி வருவதாக வேலாயுதன் ரத்னதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள்கூட தற்காலிகத் தொழிலாளர்களாகவே நடத்தப்படுவதால், அவர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF), பணிக்கொடை மற்றும் மகப்பேற்றுச் சலுகைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பில் தொழிலாளர்கள் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர்களின் பணிநிலை, சேவைத் தொடர்ச்சி மற்றும் சட்ட உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகளைத் தீர்மானிப்பதில் கூட்டு ஒப்பந்தம் ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்தது.
எனினும், கூட்டு ஒப்பந்தத்தின் செயல்பாடு பலவீனமடைந்துள்ளதால், தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான பேரம்பேசும் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் முறையான கூட்டு ஒப்பந்தங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட வேலாயுதம் ருத்ரதீபன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 1,750 ரூபாய் சம்பளம்கூட சில தோட்டங்களில் முழுமையாக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்த அவர், தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு உரிய கண்காணிப்பு அவசியம் எனவும் 2017ஆம் ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புச் சட்டைப் போராட்டம் மற்றும் ‘Team 24’ போன்ற மக்கள் இயக்கங்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதாக அதேபோன்று, தற்போதைய பெருந்தோட்டத் துறையின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துத் தொழிற்சங்கங்களும், புத்திஜீவிகளும், இளைஞர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் தோட்டங்கள் காடுகளாக மாறுவதையும், தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் தடுத்து நிறுத்துவதுடன், தொழிலாளர்களின் நில உரிமை, வீட்டுரிமை, தொழில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.










