மண்சரிவு அச்சத்தில் வாழும் கபரகல மக்களுக்கு புதிய வாழ்வு: தனி வீடுகளுக்கு இன்று அடிக்கல்…!

 

மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் பெருந்தோட்டத் துறை குடும்பங்களுக்காக வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் 170 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபரகல தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் தலா 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதற்கமைய, 170 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக மொத்தம் 850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி மூன்று கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாகத் தலா 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

குறித்த 170 வீடுகளும் ஒரே நிலப்பரப்பில் திட்டமிட்ட அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 5 ஹெக்டேயர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 பேர்ச் காணி உரிமமும் வழங்கப்படவுள்ளது.

வெறுமனே வீடுகளை மாத்திரம் நிர்மாணிக்காமல், மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாதிரி கிராமமாக இத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கமைய, புதிய கிராமத்தில் சமூக மண்டபம், விளையாட்டு மைதானம், முறையான வீதி வலையமைப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்விட வசதிகளை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Related Articles

Latest Articles