நுவரெலியாவில் 125 கிலோகிராம் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கான ஆரம்ப நிகழ்வு கோலாகலம்

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நுவரெலியாவில் அமைந்துள்ள பிளாக்பூல் சுற்றுலா ஹோட்டலில் 125 கிலோகிராம் எடையிலான பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கான கலவை சேர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

06ஆம் திகதி மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஹோட்டலின் நிர்வாக சமையல் கலைஞர் காமினி வெவாகே தலைமையிலான சமையல் கலைஞர்கள் குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்காகப் பல்வேறு வகையான உலர் பழங்கள், வெளிநாட்டுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பல லீற்றர் மதுபானங்கள் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்பட்டன.

இந்தக் கலவையை உரிய காலம் வரை ஊறவைத்து, 125 கிலோகிராம் கிறிஸ்துமஸ் கேக்கை முழுமையாகத் தயாரிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஹோட்டலின் தலைமை முகாமையாளர் திலன் கமகே தெரிவித்தார்.

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு, ஹோட்டலுக்கு வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் சுவைப்பதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியாவின் குளிரான காலநிலைக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles