பதுளை மாவட்டத்தின் மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் மண்மேடு சரிந்து வீட்டின் சமையல் அறைமீது வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (06) இரவு பெய்த பலத்த மழை காரணமாக இன்று (07) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மடூல்சீமை எலமான் பகுதியிலுள்ள 18ஆம் லயன் குடியிருப்பில் அமைந்துள்ள வீடொன்றின் சமையலறைப் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததுடன், அதனுடன் வீட்டின் சுவரும் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ரொபேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மடூல்சீமை எலமான் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ரொபேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண் சரிந்து வீழும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், மலைச்சரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
த.டிமேஷன்
