பதுளை மாவட்டத்தில் அனர்த்த அபாயம்

பதுளை மாவட்டத்தில் அனர்த்த அபாயம்

வடகீழ் பருவ பெயர்ச்சி மழை தொடர்ந்து வரும் நிலையில் பதுளை மாவட்டத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அவதான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று (09) பிற்பகல் 2 மணியளவில் பெய்யத் தொடங்கிய கடும் மழை நள்ளிரவு வரை நீடித்ததன் காரணமாக மாவட்டத்தின் மீஹாகிவுல பிரதேச செயலாளர் பிரிவிற்கு முதலாம் கட்ட மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையும் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு இரண்டாம் கட்ட அனர்த்த அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கடும் மழையினால் மாவட்டத்தின் பதுளை, பசறை, பண்டாரவளை, மீஹாகிவுல , லுனுகலை உட்பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பண்டாரவளை உட்பட பல நகரங்களில் வடிகால்களை கடந்து வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு முகங் கொடுத்தை அவதானிக்க முடிந்தது.

எல்ல- பசறை வீதியின் 23 ஆம் கட்டை , மவுசாகலை பகுதியில் பாரிய மரங்களுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதுடன் எல்ல – வெல்லவாய மற்றும் எல்ல- பசறை வீதியின் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பலத்த மழையின் காரணமாக நீரோடைகள், ஆறுகள், வடிகால்களில் மழைநீர் பெருக்கெடுத்தால் பதுளுஓயா ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக பதுளுஓயா ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களை அவசர நிலமையில் பாதுகாக்க இராணுவத்தினரும், பதுளை மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

பலத்த மழையினால் எல்ல- பசறை, பதுளை- பசறை, பசறை – மடுல்சீமை ஆகிய வீதிகளில் இடைக்கிடையே மண்மேடுகள் சரிந்துள்ளன.

அதிகாலை வேளையில் மடுல்சீமை, அப்புத்தளை, பண்டாரவளை , மீதும்பிட்டிய உட்பட பல வீதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் ஒளிர் விளக்குகளை ஒளிர விட்டு வாகனத்தை செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

பருவ பெயர்ச்சி மழை தொடரும் அறிகுறி நிலவுவதால் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதோடு தேவையற்றப் பயணங்களை தவிர்க்குமாறும் கேட்கப்ட்டுள்ளனர். சுற்றுலாக்களை மேற்கொள்வோர் பாதுகாப்பற்ற நீரேந்துப் பிரதேசங்களிற்கு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்றும் மாவட்டத்தில் மப்பும் மந்தாரமான வானிலை நிலவி வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பசறை நிருபர்

…………….

ஹட்டன் குடாகம பகுதியில் மண்சரிவு: ஒரு வழி போக்குவரத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் நேற்று (09) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மண்மேடு அகற்றப்பட்டு தற்போது ஒருவழிப் போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பெய்த கடும் மழையுடன் மலைப்பகுதியிலிருந்து பெருமளவிலான மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளன.

இதனையடுத்து, வீதியில் சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வீதியைத் துப்புரவு செய்து போக்குவரத்துக்காகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபை, நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம், ஹட்டன் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் மண்சரிவை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

………………

19 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

2026-ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனைக் கடந்துள்ளது.

நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 49,900-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இருப்பினும், மிக முக்கியமான குளிர்கால பருவம் நெருங்கி வரும் நிலையில், இந்த வருகை வீதம் கடந்த ஆண்டின் அளவை விடக் குறைவாகவே உள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் 8-ஆம் நாள் வரை மொத்தம் 49,929 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது நாளொன்றுக்கு சராசரியாக 6,241 பயணிகள் என்ற விகிதத்தில், ஒட்டுமொத்த வருகை எண்ணிக்கையை 1,912,233 ஆக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், நொவம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் பதிவான வருகை எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8.78% சரிவைக் கண்டுள்ளது.

அதேபோல், ஒட்டுமொத்த வருகை எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 1.7% குறைவாகவே உள்ளது.

இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது; நொவம்பர் மாதத்தில் இதுவரை வருகை தந்தவர்களில் 12,401 பேர் (25%) இந்தியர்கள் ஆவர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிலிருந்து 5,483 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,541 பேரும் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது, இலங்கையின்மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 512,026 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்; இந்த மைல்கல்லை எட்டிய முதல் சந்தை இதுவாகும்.

பிரித்தானியா 176,670 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், சீனா 125,326 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

…………….

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட 3 பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறி, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினர் (CID) கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி CIDயினர் வழக்குத் தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனைத் தொடர்ந்து, அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று (10) திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

………………

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தவிசாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

……………………..

சிங்கராஜ வனத்தில் 4 சீனப் பிரஜைகள் கைது

சிங்கராஜ வனப்பகுதிக்குள் பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட நான்கு சீனப் பிரஜைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40 வகையான உயிரினங்களைச் சேர்ந்த 250இற்கும் மேற்பட்ட உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட உயிரினங்கள் களவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற உயிரினங்களை அடையாளம் காண்பதற்காக இன்று (10) தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அவற்றை பின்னர் இயற்கைச் சூழலில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

……………..

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து கருத்து கோரல்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

இந்த விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.

இதில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) சார்பில் கே. பிரேமச்சந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) சார்பில் ராமசாமி ராஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்பில் சண்முகநாதன் சஞ்சீவன் ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளைக் குழுவில் முன்வைத்தனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர ஆகியோருடன், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles