அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இன்று 12) ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மொத்தம் எட்டுப் பேர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பௌத்த பிக்குகள், ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெலிசாய தூபியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்தில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் சிலர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையில், ராஜாங்கனயே சத்தாதிஸ்ஸ தேரர் தலையில் காயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ராஜாங்கனயே சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










