இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் கடத்தப்பட்டு வந்த சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களும், சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (13) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில், 52 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 58 கிலோகிராம் 736 கிராம் ஹெரோயினும், 50 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 43 கிலோகிராம் 134 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள், போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா, நடவடிக்கைப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், ‘ஒன்றிணைந்த தேசம்’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கடற்படையினரால் ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் பயனாகவே இந்தப் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி, இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘ஒன்றிணைந்த தேசம்’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படை, கடலோரக் காவல்படை, முப்படைகள், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியன இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, தரை மற்றும் கடல் வழியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் புதிய சட்ட ஏற்பாடுகள் ஊடாக கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் ஆதரவுடன் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் கடல், வான் மற்றும் துறைமுகங்கள் ஊடாக போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கான எந்தவொரு வழியும் திறந்திருக்காது எனத் தெரிவித்த அவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு உதவுவோர் இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.
அதேவேளை, கடலில் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதிலும், சட்டபூர்வமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கடற்படை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.
மீன்பிடித் தொழிலைப் போர்வையாகப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகப் பல நாட்களாக ஆழ்கடலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர் மற்றும் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட ஏனைய புலனாய்வு அமைப்புகளுக்கு ஜனாதிபதி சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஊடகங்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ‘ஒன்றிணைந்த தேசம்’ என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலம் 1,150 கோடி ரூபாவிற்கும் அதிகமான மொத்த சந்தைப் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 740 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










