தமிழகம் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மூன்று முறை வெற்றிபெற்ற தொகுதியில், தோல்விக்குப் பின்னர் மீண்டும் களம் காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால் அரசியல் கவனம் திரும்பியுள்ளது.
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. இதனால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.
கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் பின்னர், புரசைவாக்கம் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்து வரும் இத்தொகுதியில், மு.க. ஸ்டாலின் தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 68,677 வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் 91,303 வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் 1,05,522 வாக்குகளைப் பெற்ற மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
எனினும், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட மு.க. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.
மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகளைப் பெற்ற நிலையில், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் அவர் பெற்றிருந்த தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தற்போது வி.எஸ். பாபு உயிரிழந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி தி.மு.க.வுக்கு சாதகமாக அமையக்கூடும் என கட்சியினர் கருதுகின்றனர். இதனால், மீண்டும் மு.க. ஸ்டாலின் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்து, அதனை கோரிக்கையாகவும் முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
