கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத்தை நிர்மாணித்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான விருப்பத்தை இந்தியா வெளியிட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலால் கொழும்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவ்வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்தியாவால் கோரப்பட்டிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நாட்டுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அரச பங்காளிக்கட்சிகளே போர்க்கொடி தூக்கின.
இதனால் கிழக்கு முனையத்தை வழங்காதிருக்கும் முடிவை கொழும்பு எடுத்திருந்தது. இதற்கு டில்லி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. இந்நிலையில் கிழக்கு முனையத்துக்கு பதிலாக துறைமுகத்தின் மேற்கு பரப்பை அபிவிருத்தி (மேற்கு முனையம்) செய்வதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய தரப்பில் தற்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதேபோல இவ்விவகாரம் குறித்து ஜப்பானும் இந்தியாவுடன் ஆலோசனை நடத்திவருவதாக இராஜதந்திர மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பரப்பை அபிவிருத்தி செய்வதற்கு (மேற்கு முனையம் அமைப்பதற்கு) அரசு சார்பான தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளன. எனினும், இதர தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.