தமக்கு சவாலாக அமைந்துள்ள எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களின் குடியுரிமையை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
” அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இதற்கிடையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இவ்வாறு இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.
இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. பொருளாதாரம் ஆட்டம் காண்டுள்ளது. எனவேதான் எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் மெளனிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதன் ஓர் அங்கமாக எதிரணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை 7 வருடங்களுக்கு பறிக்கலாம். அதற்கான பரிந்துரையை விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைக்க கூடும்.
நேர்வழியில் அரசியலில் மோதமுடியாததால்தான் குறுக்குவழியில் அரசாங்கம் பயணிக்க பார்க்கின்றது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்றார்.
அதேவேளை, அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயலை தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.